கல்லூரி மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி-சிவகங்கையில் 26-ந்தேதி நடக்கிறது
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி வருகின்ற 26-ந்தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி வருகின்ற 26-ந்தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
மாரத்தான்
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு குறும்பட போட்டி, நாடகப்போட்டி, மாரத்தான் போட்டி ஆகியவற்றை மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்த இருக்கிறது.
இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி வருகின்ற 26-ந்தேதி காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது அரண்மனை வாசல்(சிவகங்கை பஸ் நிலையம் அருகில்) தொடங்கி, தொண்டி சாலையில் வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில் நிறைவடைய உள்ளது.
பரிசு
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் என தனித்தனியே வழங்கப்படவுள்ளது. இதுதவிர ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000-ம் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் முதல், மூன்று இடங்களை பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, திட்ட மேலாளர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.