சிவகாசியில் மாரத்தான் போட்டி
சிவகாசியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீகிருஷ்ணசாமி இண்டர் நேஷனல் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி சுப்ரீம் ஆகியவை இணைந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தியது. சிவகாசி அண்ணாமலைநாடார்-உண்ணாமலை அம்மாள் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை மேயர் சங்கீதா இன்பம், ஸ்ரீகிருஷ்ணசாமி பள்ளி அதிபர் ஆர்.முத்துக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டி மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட்டது. இதில் சிவகாசி பகுதியை சேர்ந்த 24 பள்ளிகளை சேர்ந்த 648 மாணவர்களும், 352 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் பிரிவில் அண்ணாமலை நாடார்-உண்ணாமலை அம்மாள் பள்ளி மாணவன் மதன் குமார் முதல் இடத்தையும், மாணவிகள் பிரிவில் சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பள்ளி மாணவி காஞ்சனா முதல் இடத்தையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 10 பேருக்கும், மாணவிகள் பிரிவில் 10 பேருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. 200 பேருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை மாரனேரி ஸ்ரீகிருஷ்ணசாமி பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மாரத்தான் போட்டியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.