கோவையில் மாரத்தான் ஓட்டம்


கோவையில் மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM IST (Updated: 27 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாரத்தான் ஓட்டம்

கோயம்புத்தூர்

கோவை

போலீஸ் துறையில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி கோவையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு ஓடினார்.

மாரத்தான் ஓட்டம்

கோவையில் போலீசாரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவை வந்து இருந்தார். போலீஸ் துறையில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பெண் போலீசார் கலந்து கொண்ட 5 கி.மீ. தூரம் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் போலீசாருடன் சேர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் மாரத்தான் ஓடினார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ரோஸ்கோர்ஸ், அண்ணா சிலை சிக்னல் வழியாக டாக்டர் பாலசுந்தரம் ரோடு வந்து கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து நிறைவடைந்தது.

இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், சுஹாசினி, மதிவாணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பெண் போலீசாருடன் ஓடினர். மாரத்தானில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கண்ணீர் புகை குண்டுவீச்சு

இதனை தொடர்ந்து பெண் போலீசாரை கொண்டு கலவர கூட்டத்தை கலைக்கும் ஒத்திகை நிகழ்ச்சி டி.ஜி.பி. முன்னிலையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது கண்ணீர் புகை, லத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படைப்பிரிவுகளை சேர்ந்த பெண் போலீசார் கலவரத்தை திறம்பட அடக்குவது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஒத்திகையின் போது டிரோனை பெண் போலீசாரே இயக்கி கண்ணீர் புகை குண்டை வீசி கலவரக்காரர்களின் கூட்டத்தின் மத்தியில் துல்லியமாக கண்ணீர் புகையை வீசி காண்பித்தனர்.

தொடர்ந்து போலீசில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெண் போலீஸ் டிரைவர்கள் பஸ், கனரக வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட 6 வாகனங்களை இயக்கி காட்டினர். அதனை டி.ஜிபி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். இதில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைப்பயிற்சி தளம், மினி விழா மேடை ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த பூங்காவில் போலீஸ் குடும்பத்தினரின் குழந்தைகளுடன் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சிறுவர்களோடும், போலீசார் குடும்பத்தோடும் கலந்துரையாடினார். அங்கு நட்டுவைத்த ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் ஒரு குழந்தையின் பெயரை சூட்டி பராமரிக்க அறிவுறுத்தினார்.

2 கிலோ நகை ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒப்படைத்தார். அதில் 2 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் 14 பேர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 134 செல்போன் 134 பேரிடமும், ரூ.3 லட்சம் ரொக்கம் ஒருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண் போலீசார் உள்பட 81 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.



Next Story