மரவனூர் பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா


மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பெய்த மழையால் குளத்தில் நீர் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதைத் தொடர்ந்து குளத்தில் மீன்வரத்தும் அதிகமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக நீர் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது நீரீன் அளவு வெகுவாக குறைந்து விட்டது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித் திருவிழா நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக மரவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மக்கள் திரண்டனர். இன்று காலை ஊர் முக்கியஸ்தர் கபில்தேவ் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழா தொடங்கி வைக்க குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வலை உள்ளிட்டவைகளில் மீன்களை ஆரவாரமாக பிடித்தனர்.

கட்லா, சிலேபி கெண்டை, மீசை கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. குளத்தின் ஒரு புறத்தில் சுமார் 4 கிலோ எடையுள்ள மீன்கள் வரை சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.

மரவனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து மீன்களை பிடித்துச் சென்றனர்.

1 More update

Next Story