ஆத்மநாதசுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாணிக்கவாசகர் வீதி உலா
ஆவுடையார்கோவிலில் திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு முறை திருவிழா நடைபெறும். அதன்படி மாணிக்கவாசகர் சுவாமிக்கு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருவிழாவில் காலை பிட்டுக்கு மண்சுமந்த பேரருள் காட்சியில் வீதி உலாவும், இரவு குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெற்றது.
தேரோட்டம்
இதைதொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் ஆத்மநாதா, மாணிக்கவாசகா என்ற கோஷத்தை எழுப்பியவாறு தேரை இழுத்தனர்.
தேர் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி நிலையை வந்தடைந்தது. நான்கு வீதிகளில் பக்தர்கள் கூடி நின்று அர்ச்சனை செய்து மாணிக்கவாசகரை வழிபட்டனர். தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தம்பிரான், தென் மண்டல மேலாளர் முத்துக்கிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை உபதேசக் காட்சி
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 10-ம் திருவிழாவில் வெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலாவும், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மாணிக்கவாசகர் சுவாமிக்கு உபதேசித்தருளிய உபதேசக் காட்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.