மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை கிராமத்தில் மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் உண்டியலை பெயர்த்து எடுத்து கோவிலுக்கு வெளியே கொண்டு வந்து போட்டு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல் வெளியே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.