மாரியம்மன் கோவில் திருவிழா

ஊட்டி எச்.பி.எப். பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைகுந்தா எச்.பி.எப். இந்து நகர் பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் 24-ம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி காலை 10.30 மணி அளவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தேர் வடம் பிடித்தல்
இதையடுத்து நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. 9 மணியளவில் மணிக்கு ராகுகால பூஜையும், மதியம் 12.50 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.
அதன்பின்னர் மாலை 4 மணியளவில் மாவிளக்கு பூஜையுடன் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புலி வாகனத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சள் நீராடல்
முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். விழாவையொட்டி கரகாட்டம் நடைபெற்றது. மேள-தாள இசை முழங்க அனைவரும் ஆடியபடி வந்தனர்.
பின்னர் நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கஜேந்திரன், தனலட்சுமி, மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






