மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது


மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கி உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கி உள்ளது.

கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். ஆண்டுதோறும் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கலச பூஜை மற்றும் இரவு பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கொடுத்த மலர்களை கொண்டு அர்ச்சகர் சிறப்பு வழிபாடு செய்தார். நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதி உலா

கோவில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து அடுத்த மாதம் 21-ந் தேதி வரை ஆதிபராசக்தி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 14-ந் தேதி முகூர்த்த கால் நடுதல், 17-ந் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு, கொடி இறக்கம், 21-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். சுவாமி வீதி உலா முக்கிய சாலைகளில் தினமும் நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story