மாரியம்மன் கோவில் தேரோட்டம்
செந்துறை அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் அம்மன் வீதியுலாவும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனும், மற்றொரு தேரில் விநாயகரும் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அம்மன், விநாயகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.