மாரியம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்


மாரியம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:45 PM GMT)

கற்பகநாதர்குளம்-கீழவாடியக்காடை இணைக்கும் மாரியம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

கற்பகநாதர்குளம்-கீழவாடியக்காடை இணைக்கும் மாரியம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர்குளம் கிராமத்தில் இருந்து இடும்பாவனம் கீழவாடியக்காடை இணைக்கும் மாரியம்மன் கோவில் சாலை உள்ளது. இந்த சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் அந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலை வழியாகத்தான் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இந்த பாதையில் பயணிக்க முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்று வருவதில் சிரமம்

மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் இந்த சாலையில் சென்றுவர சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த சேதமடைந்த சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து அவ்வப்போது காயம் அடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாக சென்றால் தொண்டியக்காடு, முனங்காடு பகுதிகளுக்கும் செல்லலாம். இதனால் இந்த சாலையை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சேதமடைந்த மாரியம்மன் கோவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story