தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணிகண்டன் (வயது 34). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்தநிலையில் தொழில் சரிவர அமையாததால் கடந்த 2 மாதமாக வீரமணிகண்டன், வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. சிவக்குமார் அவரிடம் வந்து வாடகை பணம் கேட்டுள்ளார். இதில் மனம் உடைந்த நிலையில் வீரமணிகண்டன் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த வீரமணிகண்டன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயத்துடன் கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

அரசு மருத்துவமனை முன் மறியல்

இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார், தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று மதியம் அவரது உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். வீரமணிகண்டனை தற்கொலைக்கு தூண்டிய சிவக்குமாரை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் தாராபுரம் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக தெற்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனை முடிந்து, வீரமணிகண்டனின் உடலை பெற்று கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story