குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர்

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஊராட்சி பொட்டக்கோட்டை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு என காவிரி குடிநீர் குழாய் ஒன்று மட்டும் உள்ளது. இதில் சரியான முறையில் குடிநீர் வினியோகம் நடைபெறுவதில்லை.

இதனால் இந்தபகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து அதில் இருந்து கசிந்து ஓடிய தண்ணீரை சேகரித்து வடிகட்டி குடிநீர் தேவைக்காகவும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மறியல்

இந்தநிலையில் சேதமடைந்த குடிநீர் குழாய் அடைக்கப்பட்டு விட்டதால் இந்தபகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தலைச்சுமையாக தண்ணீர் எடுத்து வருவதும், ஆண்கள் மோட்டார் சைக்கிள்களில் குடங்களை கட்டி தண்ணீரை தேடி அலைந்து திரிவதும் வாடிக்கையாகிவிட்டது.

கடந்த 3 மாதமாக இந்தபகுதிக்கு குடிநீர் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் பொட்டக்கோட்டை பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் திருவாடானை -மங்கலகுடி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சமரசம்

இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் உத்தரவின்பேரில் திருவாடானை வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் மற்றும் வருவாய்த் துறையினர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும் பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து சமரசம் செய்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள் 2 நாட்களில் அந்த பகுதிக்கு குடிநீர் வசதியை செய்து தருவதாகவும் ஒரு வார காலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் நீரேற்றம் செய்து புதிய குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

கலைந்து சென்றனர்

அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது அஞ்சுகோட்டை ஊராட்சி தலைவர் பூபாலன், அ.தி.மு.க. ஒன்றிய மகளிரணி செயலாளர் சபீனா கபூர், அஞ்சுகோட்டை சுதன் மகளிர் மன்றத்தினர், ஊராட்சி செயலாளர் கீதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story