மாணவிகளுடன் பெற்றோர் திடீர் மறியல்
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசுக்கல்லூரியில் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டதால், அலைக்கழிப்பதாக புகார் கூறி மாணவிகளுடன் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலந்தாய்வு
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை கடந்த மே 30-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏராளமான மாணவிகள், தங்களது பெற்றோருடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அனைவரும் திங்கட்கிழமை (நேற்று) வருமாறு கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை ஏராளமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் கல்லூரியில் குவிந்திருந்தனர்.
சாலை மறியல்
ஆனால் மாணவிகள் சேர்க்கை பணி நடைபெறாமல் தாமதம் ஆனதாக தெரிகிறது. மேலும் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 12-ந்தேதி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் ஓட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், தங்களது பிள்ளைகளுடன் கல்லூரிக்கு எதிரில், பல்லடம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ெபாதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிளஸ்-2 முடித்து கல்லூரி சேர உள்ள மாணவிகள் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பிளஸ்-2 படிப்பை முடித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயில்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தோம். கலந்தாய்வுக்கு கடந்த 3-ந் தேதி வரச்சொல்லி அறிவித்திருந்தனர். 3-ந் தேதி கல்லூரிக்கு சென்று கேட்டபோது, கட்-ஆப் மதிப்பெண் 280-க்கு மேல் உள்ளவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது, மீதமுள்ளவர்களுக்கு 5-ந் தேதி(நேற்று) நடைபெறும் என்று கூறினர்.
இதை நம்பி கல்லூரிக்கு சென்ற கேட்டபோது, மொத்தம் 4,200 விண்ணப்பங்கள் வந்துள்ளது. 1066 படிவங்கள் மட்டுமே கல்லூரியில் பயில அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 986 படிவங்கள் முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 80 படிவங்களுக்கு மட்டுமே சோ்க்கை நடைபெறும் என்று கல்லூரி தரப்பில் இருந்து கூறினர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து மீதமுள்ள அனைத்து மாணவிகளும் கல்லூரியில் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.