கந்தசாமி கோவில் தேரோட்டத்தையொட்டிகாளிப்பட்டியில் நடந்த நாட்டு மாடுகள் சந்தை மயிலை காளை ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது
எலச்சிபாளையம்:
காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்டத்தையொட்டி நடந்த நாட்டு மாடுகள் சந்தையில் மயிலை காளை ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது.
நாட்டு மாட்டு சந்தை
திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டத்தையொட்டி நாட்டு மாட்டு சந்தை கூடுவது வழக்கம். பல்வேறு இடங்களில் மாட்டு சந்தை நடந்தாலும், காளிப்பட்டியில் நாட்டு மாடுக்கு என தனி சந்தை கூடுவது சிறப்பம்சமாகும்.
இந்த சந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் நாட்டு மாடுகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர்.
மயிலை காளை
சந்தையில் சந்தன பிள்ளை, மயிலை, நாட்டுக்குட்டை, தெக்கத்தி மாடு, கோரப்பட்டு, செவலை, கறுக்கா மயிலை, காங்கேயம், மயிலை காளை வகை, காராம் பசு வகை, ஆலம்பாடி, வடக்கத்தி, மற்றும் நாட்டு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதையடுத்து நடந்த சந்தையில் வைகுந்தம் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மயிலை காளை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
பவானி, மயிலம்பாடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட காங்கேயம் காளைகள் மற்றும் பசுக்கள் விற்பனைக்கு வந்தன. இவற்றுள் காளைகள் ஜோடிக்கு ரூ.1½ லட்சம், பசு மற்றும் கன்றுக்கு ரூ.75 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
கன்று விற்பனை அதிகரிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மாடுகள், வண்டி மாடுகளின் வரத்து குறைவாக இருந்தது. கன்றுகளின் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர். மேலும் மாட்டு சந்தையையொட்டி தலை கயிறு முககயிறு, சாட்டை, சலங்கை, கழுத்து மணிகள் விற்பனையும் நடந்தது குறப்பிடத்தக்கது.