விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம சாவு


விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம சாவு
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள்

விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவருடைய மனைவி உமாதேவி (61).

இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்களுக்கு ராஜராஜ சோழன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ராஜராஜசோழன் பெங்களூருவிலும், மகள் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். ராஜனும், உமாதேவியும் வளவனூரில் தனியாக வசித்து வந்தனர்.

தூக்கில் பிணம்

இந்நிலையில் நேற்று இரவு ராஜன், உமாதேவி ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். பிணமாக கிடந்த அவர்கள் இருவரின் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை. பின்னர் அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் கொடுத்து ஏமாற்றம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜனின் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு இருந்துள்ளார்.

அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால் அந்த தொழில் விஷயமாக ரூ.21 லட்சத்தை ராஜனிடம் கடனாக வாங்கி இருந்தார். பலமுறை வற்புறுத்தி கேட்டும் அந்த கடனை அந்த நபர் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார்.

இந்த சூழலில் ராஜனும், உமாதேவியும் மர்மமான முறையில் இறந்திருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையா?

வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராஜன், உமாதேவி ஆகிய இருவரையும் யாரேனும் திட்டமிட்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்தனரா? அல்லது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான தம்பதியினர் தங்கள் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story