காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி தலைவர் மகள் மர்மச்சாவு


காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி தலைவர் மகள் மர்மச்சாவு
x

திருவண்ணாமலை அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகள் மர்மமான முறையில் இறந்தார். அவரை வரதட்சணை கேட்டு அடித்துக்கொலை செய்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலைதிருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகள் மர்மமான முறையில் இறந்தார். அவரை வரதட்சணை கேட்டு அடித்துக்கொலை செய்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணி

திருவண்ணாமலை சு.ஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தவமணி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது 2-வது மகள் புஷ்பா (வயது 26). இவரும், பெரிய கல்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் விவேகானந்தன் என்பவரும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் புஷ்பா கர்ப்பிணியாக இருந்ததாகவும், இதற்கிடையில் புஷ்பாவை அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தாய் வீட்டிற்கு வந்த புஷ்பாவை அவரது பெற்றோர் கடந்த 4-ந்தேதி புஷ்பாவின் கணவர் வீட்டில் விட்டு வந்து உள்ளனர். மறுநாள் புஷ்பா தூக்குப்போட்டு இறந்து விட்டார் என்று ஆறுமுகத்திற்கு அவரது உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் புஷ்பாவின் கணவர் விவேகானந்தன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் புஷ்பா உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சாலை மறியல்

தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அடித்து கொன்று விட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை புஷ்பாவின் உடலை வாங்க மட்டோம் என்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வந்தனர். பின்னர் அவர்கள் புஷ்பாவின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story