தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவு
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்மமான இறந்து கிடந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் தட்டப்பாறை சாலை உள்ள கற்கூரணி குளத்தின் கரையில் ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், புதியம்புத்தூரில் வசித்து வந்த சண்முகசுந்தரம் மகன் சதீஷ் (வயது 38) என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவி பிரிந்து சென்றார்
மேலும் சதீஷ் மது போதைக்கு அடிமையானதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சதீஷ் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சதீஷ் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் சதீஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
சதீஷ் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.