அமெரிக்காவில் வசிக்கும் வாலிபருடன் இளம்பெண் 'ஆன்லைன்' திருமணம் செய்துகொள்ளலாம்


அமெரிக்காவில் வசிக்கும் வாலிபருடன் இளம்பெண் ஆன்லைன் திருமணம் செய்துகொள்ளலாம்
x

அமெரிக்காவில் வசிக்கும் வாலிபருடன், பெண் என்ஜினீயர் ஆன்லைன் முறையில் திருமணம் செய்துகொள்ள மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததுடன், முறைப்படி பதிவு செய்து சார்-பதிவாளர் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மதுரை


அமெரிக்காவில் வசிக்கும் வாலிபருடன், பெண் என்ஜினீயர் ஆன்லைன் முறையில் திருமணம் செய்துகொள்ள மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததுடன், முறைப்படி பதிவு செய்து சார்-பதிவாளர் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அமெரிக்க வாலிபருடன் திருமணம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி (வயது 28), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். அவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இங்குள்ள சிறப்பு திருமணச்சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம்.

இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் கடந்த 5.5.2022 அன்று விண்ணப்பித்தோம். பின்னர் நாங்கள் இருவரும் திருமண பதிவு அதிகாரி முன்பு நேரில் ஆஜரானோம்.

வீடியோ கான்பரன்சிங்

ஆனால் எங்கள் திருமண விண்ணப்பத்தின்பேரில் முடிவு எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, நாங்கள் இருவரும் காத்திருந்தோம். 30 நாட்கள் முடிந்த பின்பும், எங்கள் திருமண விண்ணப்பத்தின் மீது சார்-பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே எனது வருங்கால கணவர் ராகுல், இங்கு தங்குவதற்கு அவகாசம் இல்லாமல் போனது. அவரது விடுமுறையை நீட்டிக்க வழியில்லை. இதனால் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் திருமண பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சார்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார்.

அவர் மீண்டும் இந்தியா வந்தால் கடுமையான பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே நாங்கள் இருவரும் 'வீடியோ கால்' மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின்மூலம் பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆன்லைன் திருமணத்துக்கு அனுமதி

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே அவர்களின் திருமணத்தை வீடியோ கால் மூலம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. 3 சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும், ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார்-பதிவாளர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story