வாட்ஸ்-அப்'பில் அழைக்கிறார்கள்;'ஜி.பே'யில் மொய் எழுதுகிறார்கள்-திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?-பொதுமக்கள் கருத்து


தினத்தந்தி 4 March 2023 12:15 AM IST (Updated: 4 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணத் தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசு அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது.

அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.

மாறிக்கொண்ட மக்கள்

இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட. ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள்.

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். மாறி வரும் இந்த கலாசாரம் பற்றி பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

உணர்வுப்பூர்வமானது

ராமகொண்டஅள்ளியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன்:-

திருமண அழைப்பிதழ்கள் என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இப்போதெல்லாம் பலர் அதை வெறும் அட்டையாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தகவல் மட்டும் தெரிந்தால் போதும் என்ற போக்கு சரியல்ல. தமிழர்களின் பழக்க வழக்கங்களில் திருமண அழைப்பிதழ் தருவதும் ஒன்றுதான். அதை நாமும் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் இதை அறிந்து கொள்ளாமலேயே போய்விடுவார்கள். எனவே அழைப்பிதழை சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புவது சரியல்ல. அதனை ஊக்குவிக்கவும் கூடாது. இவ்வாறு செய்வது திருமண அழைப்பிதழ்களை அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள அச்சகத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கிறது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வருவாயையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் வசதிகளை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக பயன்படுத்தலாமே தவிர பாரம்பரிய நடைமுறைகளை மாற்றுவதற்கு பயன்படுத்தக் கூடாது.

ஏற்புடையதல்ல

ஏரியூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி காளியப்பன்:-

கடந்த காலங்களில் ஊர் கூடி திருமணம் செய்தனர். ஒரு வாரம் திருவிழாவாக திருமணம் நடைபெறும். இப்போது சில மணி நேர நிகழ்வாக திருமணம் மாறி வருகிறது. கிராமங்களில் மொய் பணம் கொடுக்கும் பொழுது, குடும்ப பெயரையும், மொய் கொடுக்கும் நபரின் பெயரையும், சொல்லி மைக்கில் அறிவிப்பு வெளியிட்டு மொய் வழங்குவது நடைமுறையில் இருந்தது. இப்போது அந்த நடைமுறைகள் மாறிவிட்டது.

புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மட்டுமே பலர் திருமண விழாவிற்கு செல்லும் நிலை உள்ளது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் திருமண அழைப்பிதழ் வழங்கும் முறையை மாற்றுவது ஏற்புடையதல்ல. திருமண நிகழ்வுகள் மூலமாக பிரிந்த எத்தனையோ உறவுகள் இணைந்து இருக்கின்றன. சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் பரிமாறப்படுவது தவறான போக்கு ஆகும். சொந்த பந்தங்களை நேரில் பார்த்து விழாவுக்கு அழைப்பதால் உறவுகளின் பெருமையும், ஒற்றுமையும் கூடும்.

நட்புணர்வை வளர்க்கும்

பாலக்கோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி காவியா:-

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பழக்கங்கள் மாறி வருகின்றன. முன்பு கடித போக்குவரத்து இருந்தது. இப்போது செல்போன் வந்துவிட்டது. தொலைதூர உறவுகளையும் நொடிப் பொழுதில் பார்த்து, பேச வைக்கும் அளவுக்கு இணைய சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், மிக அதிக தூரத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமணம் குறித்த அழைப்பிதழை சமூக வலைதளம் மூலம் அனுப்பலாம்.

இவ்வாறு நீண்ட தூரத்தில் இருந்து திருமணத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் ஜி.பே மூலம் மொய் அனுப்பலாம். அதே நேரத்தில் திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பது, திருமண நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்பது ஆகியவை உறவினர்கள், நண்பர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி நட்புணர்வை வளர்க்கும். எனவே இந்த பாரம்பரிய நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

மனித மாண்பு

எண்டப்பட்டியை சேர்ந்த என்ஜினீயர் பாலாஜி:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்தால் மொய் மற்றும் பரிசு வழங்குவதற்கு உறவினர்கள் நண்பர்கள் நேரில் வருவார்கள். இப்போது பலர் வாட்ஸ்-அப்பில் திருமண பத்திரிகை வந்தால் ஆன்லைனில் மொய்ப்பணம் அனுப்புவதை வாடிக்கையாக்கி விட்டனர். கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்க எந்திரம் எப்போது வந்ததோ, அப்போதே விசேஷ விழாவின் பாரம்பரியம் அழிய தொடங்கி விட்டது. இந்த நவீன நடைமுறைகள் மனித மாண்பை குறைக்க தொடங்கி விட்டன. இந்த நவீன தொழில்நுட்பத்தை மிக நீண்ட தூரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தலாம். திருமண நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வாழ்த்தும் வாய்ப்பும், வசதியும் இருப்பவர்கள் நிச்சயம் நேரில் சென்று மணமக்களை வாழ்த்துவதே சரியானது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் கருத்து என்ன?

திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மொத்தத்தில், சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.

1 More update

Next Story