திருமண மோசடி: ஆன்லைனில் அறிமுகமாகும் நபரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு


திருமண மோசடி: ஆன்லைனில் அறிமுகமாகும் நபரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு
x

ஆன்லைனில் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணத்தை இழக்க கூடாது என்று பெண்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

விழிப்புணர்வு வீடியோ

திருமண தகவல் இணையதளங்கள் மூலம் திருமண ஆசை வார்த்தைக்கூறி நடைபெற்று வரும் பண மோசடி குறித்து பெண்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

வீடியோவில் சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-

திருமண தகவல் இணையதளத்தில் வரன் பார்ப்பதற்காக தங்களுடைய விவரங்களை பெண்கள் பதிவேற்றம் செய்து வைத்து இருப்பீர்கள். அதில் இருக்கும் உங்கள் செல்போன் எண்ணை எடுத்து, ' உங்களுக்கு பொருத்தமான வரன் இருக்கிறார். நீங்கள் டாக்டர் என்றால் உங்களுக்கு பொருத்தமான டாக்டர் மாப்பிள்ளை இருக்கிறார். நீங்கள் 'சாப்ட்வேர் என்ஜினீயர்' என்றால், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயர் வரன் இருக்கிறார் என்றுகூறி அந்த நபரை உங்களுடன் தொடர்பு கொள்ள வைப்பார்கள்.

போலி பரிசு

அந்த நபர் பழக்கமாகி, ஒரு பரிசு அனுப்புவார். அந்த பரிசு மும்பை விமான நிலையத்துக்கு வரும். அங்கிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் உங்களை கூப்பிடுவார்கள். நீங்கள் ரூ.35 ஆயிரம் பணத்தை அனுப்புங்கள். அந்த விலைமதிப்புமிக்க பரிசை நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்வார்கள். உடனே நீங்கள் ரூ.35 ஆயிரம் அனுப்பினால், உங்களுடைய வருங்கால கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைத்திருக்கும் பரிசு ரூ.35 லட்சம் மதிப்புடையது ஆகும். அதற்கு 10 சதவீதம் வரி என்றால் கூட ரூ.3 லட்சம் ஆகும். எனவே நீங்கள் ரூ.3 லட்சம் அனுப்புங்கள் என்று சொல்வார்கள்.

இப்படி பலமுறை உங்களை ஏமாற்றுவார்கள். திடீரென்று அந்த நபர் நானே ஊருக்கு உங்களை பார்க்க வருகிறேன் என்று தகவல் அனுப்புவார். மும்பை விமான நிலையம் வந்துவிட்டேன், எனக்கு விசா கிடையாது. நீங்கள் பணத்தை அனுப்பினால் விசா வாங்கி விடுவேன். இந்த வங்கி கணக்கில் பணத்தை அனுப்புங்கள் என்று சொல்வார்.

மோசடி பேர்வழிகள்

இப்படி நீங்கள் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் கட்டின பின்னர்தான் தெரியும் அந்த நபர் மோசடி பேர்வழி. இப்படி ஒரு ஆளே கிடையாது. இது போலியான நபர் என்று தெரிய வரும். இப்படி பல பெண்கள், டாக்டர்கள், பெரிய படிப்பு படித்தவர்கள் கூட ஏமாந்து போய் இருக்கிறார்கள்.

எனவே திருமண தகவல் இணையதள மையங்களில் பெயரை பதிவு செய்து வரனை தேடும் பெண்கள் தயவு செய்து, ஆன்லைனில் இப்படிப்பட்ட வரன் கிடைக்கிறார் என்று நினைத்து பணத்தை இழந்துவிட வேண்டாம். உங்களிடம் பணத்தை கேட்டாலே, அவன் மோசடிக்காரன் ஆவான். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசு அனுப்புகிறேன் என்று சொன்னாலும் ஏமாந்துவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.


Next Story