பஸ் வசதி இல்லாத ஊரில் திருமணமா? 20 கிராம இளைஞர்களை புறக்கணிக்கும் பெண்கள்
பஸ் வசதி இல்லாத ஊரில் திருமணம் வேண்டாம் என்று 20 கிராம இளைஞர்களை பெண்கள் புறக்கணிக்கின்றனர்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அது போல் இன்றைய விஞ்ஞான உலகில் அடிப்படை வசதிகள் இல்லாத ஊர்களில் வசிப்பவர்களை, பலரும் புறக்கணிக்கின்றனர். அதுவும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர், தங்கள் மகள்களை அடிப்படை வசதி இல்லாத ஊர்களில் வசிப்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர்.
திருமணத்திற்கு மறுப்பு
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள 20 கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களை, திருமணம் செய்து கொள்ள பெரும்பாலான பெண்கள் மறுக்கின்றனர். காரணம், அந்த ஊர்களுக்கு பல ஆண்டுகளாக பஸ் வசதி என்பதே இல்லை. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரமுள்ள வல்லம்படுகை, தீத்துகுடி, கருப்பூர், நலன் புத்தூர், முல்லங்குடி, மேல பருத்திக்குடி, கீழப் பருத்திக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை வசதியே இல்லை. இதனால் அந்த கிராமங்களுக்குள் பல ஆண்டுகளாக பஸ்கள் சென்றதே கிடையாது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்வதே அப்பகுதி மக்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
அதிக கட்டணம்
கொள்ளிடம் கரையோரமுள்ள சேதமடைந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு தினசரி அவ்வழியாக செல்ல சிரமப்படுவதால் பலர் தங்களது குழந்தைகளை வெளியூர்களில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.
மேலும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பலர், பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்றனர். இதுதவிர பஸ் வசதி இல்லாத காரணத்தாலே ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். கிராம மக்களும் வேறு வழியின்றி அவர்கள் கேட்கின்ற கட்டணத்தை கொடுக்கின்றனர்.
மரண பயம்
ஒரு பக்கம் அடிப்படை வசதிகள் இல்லையென்றால், மற்றொருபுறம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மரண பயத்தில் தான் உள்ளனர்.
இரவில் தூங்கினால், காலையில் எழுந்திருப்போமா என்ற பயத்திலேயே காலத்தை கழிக்கின்றனர். எந்நேரமும் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகும் என்ற அச்சத்திலேயே உள்ளனர். 20 கிராமங்களுக்கும் பஸ் வசதியே இல்லாததாலும், கொள்ளிடம் கரையோரம் இருப்பதாலும் அப்பகுதி இளைஞர்களை திருமணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் மறுக்கின்றனர்.
காரணம், திருமணம் செய்தால் அவசர தேவைக்கு கூட உடனுக்குடன் நகர பகுதிக்கு வர முடியாது, பெற்றோர் வீட்டுக்கு நினைத்த போதெல்லாம் சென்று வர முடியாதே என்ற எண்ணம் தான். இதனால் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பல ஆண்டுகளாக வரன் தேடியே காலத்தை கழித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்
இதனால் இப்பகுதி மக்கள் தினம்தினம் நரக வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே முதற்கட்டமாக சாலையை சீரமைத்தால் தான் ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லும், அதிகாரிகளின் கவனமும் எங்கள் பகுதி மீது விழும், அதன் மூலம் அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கீழே விழுந்து காயம்
பள்ளி மாணவன் பிரதாப்: இங்குள்ள சாலை சரியில்லாததால் ஒரு நாள் நான் பள்ளிக்கு சைக்கிளில் சென்ற போது ஆற்றங்கரையில் கீழே விழுந்ததில் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. அன்று முதல் சைக்கிளில் செல்வதை நிறுத்தி விட்டேன். நீண்ட தூரமாக இருந்தாலும் வேறு வழியின்றி பள்ளிக்கு நடந்து தான் செல்கிறேன். அதனால் சாலையை சீரமைத்து, பஸ்கள் இயக்க வேண்டும்.
இயற்கை எழில் மிகுந்த பகுதி
தனியார் பள்ளி ஆசிரியர் பிரகாஷ்: நான் தினசரி கொள்ளிடம் கரையோரம் உள்ள சேதமடைந்த சாலை வழியாகத் தான் பள்ளிக்கு சென்று வருகிறேன். சேதமடைந்த சாலையால் எனது மோட்டார் சைக்கிள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தினசரி செல்வதால் முதுகு வலி ஏற்படுகிறது. இதனால் பல மாதங்களாக நான் மருத்துவத்திற்கே அதிக செலவு செய்துள்ளேன். மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும். ஆனால் உருக்குலைந்து கிடக்கும் சாலையால் அதன் அழகு பாழாகி வருகிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடி தீர்வு
விவசாயி ஞானசேகரன்: கொள்ளிடம் கரையோரம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். மேலும் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் போது, சேதமடைந்த சாலையால் தள்ளாடியபடி தான் செல்கிறோம். அவ்வாறு செல்லும் போது அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகிறோம். எனவே இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
உள்ளூரிலேயே திருமணம்
கலையரசன்: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி மனுக்கள் கொடுக்காத அதிகாரிகளே இல்லை. இருப்பினும் அதிகாரிகள் எங்கள் பகுதியை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். அதனால் அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கூட எங்கள் பகுதிக்குள் வரமுடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும், அந்த கிராமத்துக்கு வாகனம் வராது என்று அலட்சியமாக கூறுகின்றனர். இதனால் வெளியூர்களில் வசிப்பவர்கள் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். அதனால் பலர் உள்ளூரிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே எங்கள் பகுதி மக்கள் நலன்கருதி வல்லம்படுகை முதல் வெள்ளூர் வரைக்கும் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.