2-வது திருமணம் செய்த வடமாநில பெண் திடீர் தற்கொலை
சூலூரில் முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்
சூலூரில் முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில பெண்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியா டாமா (வயது 49). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரியா டாமா தனது கணவரை விட்டு பிரிந்து கோவைக்கு வேலை தேடி வந்தார். இவர் ஆரம்பத்தில் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சூலூரில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அந்த நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிரியா டாமாவிற்கு தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2-வது திருமணம்
இந்த நிலையில் பிரியா டாமா தனது முதல் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்த நபரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது அக்காவுடன் பிரியா டாமா வீடியோ கால் மூலம் பேசி உள்ளார்.
அப்போது பிரியா டாமா, தான் கோவையில் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும், தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது அக்கா, 2-வது திருமணம் குறித்து வீட்டில் எதுவும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் பிரியா டாமா தனது 2-வது திருமணம் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படுமே என்று மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியா டாமா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த 2-வது கணவர் இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரியா டாமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2-வது திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.