மலேசியாவில் தியாகதுருகம் தொழிலாளி கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மனைவி கோரிக்கை மனு


மலேசியாவில் தியாகதுருகம் தொழிலாளி கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மனைவி கோரிக்கை மனு
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தியாகதுருகம் தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி வளர்மதி(42). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி ஒருவரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பாண்டியன் சுமார் 12 ஆண்டுகளாக மலேசியா நாட்டில் கோலாலம்பூர் அருகே கம்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி எனது கணவர் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான தமிழ்நாட்டை சேர்ந்த ராஜசேகர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாண்டியனுக்கும், அவருடன் தங்கி இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த நபர் பாண்டியனை கத்தியால் குத்தினார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

சொந்த ஊருக்கு கொண்டு வர...

இறந்துபோன பாண்டியனுக்கு கொரோனா தொற்று உள்ளதால், மலேசியா நாட்டிலேயே உடலை அடக்கம் செய்ய எனது சம்மத உறுதிமொழி பத்திரம் வேண்டும் என்று பேசினார். ஆனால் எனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இறந்து போன எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். பாண்டியன் இறந்து 5 நாட்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு வராததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


Next Story