மருதையாறு-ஓடைகளை சீரமைக்க வேண்டும்


மருதையாறு-ஓடைகளை சீரமைக்க வேண்டும்
x

மருதையாறு-ஓடைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

முக்கிய நீர் ஆதாரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக மருதையாறு திகழ்கிறது. மிக பழமை வாய்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் ஒன்றான பச்சை மலைத்தொடர் பெரம்பலூர் மாவட்டத்தின் பல ஊர்களிலும் விரவியுள்ளது. மாவட்டத்தின் மேற்கு அரணாக விளங்கும் பச்சை மலைத் தொடரின் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த மருதையாறானது புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர், நெடுவாசல், க.எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம், கொட்டரை, பிலிமிசை, கூடலூர், அருணகிரிமங்கலம், மாக்காய்குளம், ரசுலாபுரம் வழியாக பாய்ந்தோடி அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து பிறகு வைப்பூர், முட்டுவாஞ்சேரி பகுதியில் கொள்ளிடத்தில் கலக்கிறது.

இந்த ஆற்றின் கிளை ஓடைகளாக சிறுகன்பூர், கொளக்காநத்தம், பேரளி, மூங்கில்பாடி உள்ளிட்ட ஓடைகளும், நூற்றுக்கணக்கான சிறு சிறு ஓடைகளும் உள்ளன. சிறுவாச்சூர் மலையில் இருந்து உற்பத்தியாகும் மற்றொரு ஓடையானது சிறுவாச்சூர் பெரிய ஏரியை நிரப்பி, பிறகு அயிலூர் ஏரியை நிரப்பி, வரகுபாடி ஏரியை அடைந்து அங்கிருந்து சிறுகன்பூர் வழியாக செல்லும் ஓடையானது பிலிமிசை - இலுப்பைக்குடி சாலைக்கு அருகே மருதையாற்றோடு சேர்கிறது. காரை, கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி வழியாக வந்து சேரும் மற்றொரு ஓடையானது கூடலூர்-அருணகிரிமங்கலம் இடைப்பட்ட பகுதியில் மருதையாற்றோடு சேர்கிறது.

சங்கிலி தொடர் ஏரிகள்

இதேபோல் பேரளி, மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரளி ஓடையும், ஒதியம், மூங்கில்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மூங்கில்பாடி ஓடையும் மருதையாறு நீர்த்தேக்க பகுதிகளில் மருதையாற்றோடு சேர்கிறது. மேலும் பச்சைமலைத் தொடரில் உள்ள ஆனைகட்டி ஆறு உள்ளிட்டவை மூலம் நீர் பெறும் லாடபுரம் பெரிய ஏரி நிரம்பி வெளியேறி கோனேரி ஆற்றில் செல்லும் நீரை குரும்பலூர்-புதூர் சாலைக்கு அருகே உள்ள தடுப்பணை மூலம் குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் மேலேரி, பெரம்பலூர் கீழேரி, துறைமங்கலம் பெரிய ஏரி, துறைமங்கலம் சின்ன ஏரிகளுக்கு கொண்டு சேர்க்கும் கட்டமைப்பு உள்ளது. மழைக்காலங்களில் லாடபுரம் பெரிய ஏரி உள்ளிட்ட சங்கிலித்தொடர் ஏரிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி வழியும்.

துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஒரு வாய்க்கால் வழியாக நெடுவாசல் அருகே மருதையாற்றில் கலக்கிறது. இதேபோல் துறைமங்கலம் சின்ன ஏரியின் நிரம்பி வழியும் நீரும் மருதையாற்றில் கலக்கிறது. இப்படி பல வழிகளில் நீர்பெறும் இந்த மருதையாறானது பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் நீராதாரம் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட ஏனைய நீர்நிலைகளின் ஆதாரமாகவும் விளங்குகிறது.

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம்

இந்த மருதையாற்றின் குறுக்கே விளாமுத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு மற்றும் அதனையொட்டிய வாய்க்கால் வழியாக துறைமங்கலம் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரிகள் நீர்பெறுகிறது. மேலும் கொட்டரை-ஆதனூர்-குரும்பாபாளையம் பகுதியில் சுமார் ரூ.149.04 கோடியில் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் வகையில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது.

இந்த நீரத்தேக்கத்தின் மூலம் சுமார் 4 ஆயிரத்து 194 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. இப்படி பல்வேறு வழிகளில் பயணிக்கும் மருதையாறு மற்றும் அதனுடைய கிளை ஓடைகள் கடந்த பல ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாத காரணத்தினால் பல இடங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவற்றை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது பற்றி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை காணலாம்.

மீட்டெடுக்க வேண்டும்

குரும்பாபாளையத்தை சேர்ந்த விவசாயி சின்னதுரை:- முன்பு இந்த மருதையாற்றில் வருடத்தின் ஏறக்குறைய பல மாதங்கள் நீர் ஓடிக்கொண்டிருந்தது. மணலை சிறிது விலக்கினால் தூய குடிநீரும் கிடைத்தது. ஆற்று மணலில் மானாவாரி நிலங்களில் விளைந்த மிளகாய்களை மக்கள் காய வைத்திருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. காணும் பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆற்றில் நடந்தன. ஆனால் இன்றோ ஆட்களே செல்ல முடியாத அளவிற்கு சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட முட்செடிகளால் சூழப்பட்டுள்ளது. மழைக்காலங்களை ஒட்டிய சில மாதங்களைத் தவிர மற்ற நாட்களில் முறையாக சுத்திகரித்து விடப்படுவதாக சொல்லப்படும் பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடைக் கழிவுநீர் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

மருதையாறு மற்றும் கிளை ஓடைகளின் பல இடங்களில் முறையாக சீரமைக்கப்படாத காரணத்தினால் மழைக்காலங்களில் பனங்கூர், தெற்கு மாதவி, சாத்தனூர், இலுப்பைக்குடி, அயினாபுரம் உள்ளிட்ட ஊர்களில் வெள்ள நீரானது வயல்களுக்குள்ளும், ஊர்களுக்குள்ளும் புகும் நிலை தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில் அரசு சார்பில் சிறுகன்பூர் ஓடை, கொளக்காநத்தம் ஓடை உள்ளிட்ட ஓடைகளின் சில பகுதிகள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மருதையாற்றின் விளாமுத்தூர் அணைக்கட்டு முதல் நெடுவாசலின் குறிப்பிட்ட பகுதி வரை சீரமைக்கப்பட்டது. ஆனால் இது போதுமானதாக இல்லை. எங்கள் கிராமத்தின் சில பகுதிகளிலும் மழைக்காலத்தில் வெள்ள நீர் புகும் நிலையும் உள்ளது. எனவே மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகளின் அனைத்து பகுதிகளையும் முறையாக சீரமைக்க உரிய நிதி ஒதுக்கி விரைந்து பணிகளை மேற்கொள்ள ஆவண செய்து அழிவை நோக்கிச் செல்லும் மருதையாற்றை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

நினைவு தூண்

ரசுலாபுரத்தை சேர்ந்த இளையராஜா:- பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி செல்லும் வழியெங்கும் வளம் சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து பிறகு கொள்ளிடத்தில் சேர்கிறது இந்த மருதையாறு. பெரம்பலூர் மாவட்ட எல்லையின் கடைக்கோடியில் உள்ள எங்கள் கிராமத்தின் வழியே பாயும் மருதையாறு முறையான சீரமைப்பின்றி உள்ளது. இந்த ஆறு மட்டுமின்றி இதனுடைய கிளை ஓடைகளான சிறுகன்பூர், கொளக்காநத்தம், பேரளி, மூங்கில்பாடி ஓடைகளின் பல இடங்களும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே உரிய நிதி ஒதுக்கி ஆறு மற்றும் கிளை ஓடைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அவ்வப்போது நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பதோடு மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகள் பாயும் ஊர்களில் குப்பைகளை ஆற்றிலோ அல்லது கிளை ஓடையிலோ கொட்டாமல் இருக்க உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆறு மற்றும் கிளை ஓடைகளில் முறையாக ஆய்வு செய்து ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்பணைகளை அமைத்து நீர் செறிவூட்டும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மேலும் மருதையாறு மற்றும் கிளை ஓடைகளில் ஆங்காங்கே தகவல் பலகைகளையும் அமைக்க வேண்டும். அதோடு நாட்டையே உலுக்கிய கடந்த 1956 -ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தில் உயிர்நீத்த மக்களின் நினைவாக மருதையாற்றில் ஒரு நினைவுத்தூணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story