திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்


திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்
x

திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி நடந்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்
மலைக்கோட்டையில் மரம் வளர்ப்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்க கடந்த 2017-2018-ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில் ஒன்று கூட தற்போது இல்லை. அங்கு காலி பேரல்கள், சொட்டுநீர் பாசன குழாய்கள் மட்டுமே காட்சி பொருளாக கிடக்கின்றன. அரசின் நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் மோசடி நடந்து இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அம்மாபட்டி வடக்கு கனகையாபுரத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், அம்மாபட்டி வடக்கு கனகையாபுரத்தில் உள்ள காளியம்மன்-முத்தாலம்மன் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் திருப்பணி நடைபெற இருக்கிறது. இந்த திருப்பணிக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு சுந்தரேஸ்வரன் (வயது 60) கொடுத்த மனுவில், எனது நிலத்துக்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து விட்டேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் எனது ஜீவசமாதி அடைய பள்ளம் தோண்டினேன். அதிகாரிகள் என்னை தடுத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். எனினும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இதனால் எனது நிலத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன், என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் சிலுவத்தூர் ஊராட்சி கொத்தப்புளிபட்டியை சேர்ந்த ராதா (60) என்பவர், தனது மகளுக்கு தானமாக கொடுத்த வீட்டை மீட்டு தரும்படி மனு கொடுத்தார்.



Next Story