மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தா.பேட்டை, அக்.8-
தா.பேட்டையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அடிப்படை வசதி செய்து தரகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு சேகர் தலைமை தாங்கினார். இதில் தா.பேட்டை புறவழிச்சாலையில் இணைப்பு சாலையை அகலபடுத்தி பாலம் அமைக்க வேண்டும், தா.பேட்டை பஸ் நிலைய வணிக வளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், தா.பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வளையெடுப்பு, துலையாநத்தம், ஊரக்கரை, கோனப்பம்பட்டி, நீலியாம்பட்டி, தேவானூர், மகாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தார் சாலைகளை சீரமைக்க வேண்டும்., வடிகால்கள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் எரகுடி, வடக்குப்பட்டி, கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கிடவும், காவிரி கூட்டுக் குடிநீர் முறைப்படி வழங்கவும், நூறுநாள் வேலைத் திட்டத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
முசிறி கைகாட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சியில் நிரந்தர அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.