கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2023 1:00 AM IST (Updated: 3 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

கோவை

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும், அங்கு அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் கோவை சிவானந்தாகாலனியில் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திட்டமிட்ட சதி

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதத்திற்கும் மேலாக கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது. இது இரண்டு இனத்தவருக்கான மோதல் என்பது போன்ற தோற்றத்தை பா.ஜனதா ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைகளில் இருந்து மக்களை அகற்றிவிட்டு, அந்த மலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கவே இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு சதி செய்து பா.ஜனதாவால் நடத்தப்படுகிறது.

மத்திய அரசு மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய தயாராக இல்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும், மணிப்பூர் அரசும் உதவி செய்யவில்லை. இந்த நிலையில்தான் மனிதாபிமான உணர்வோடு, மணிப்பூர் மக்களுக்கு ரூ.10 கோடி அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

ஜவுளி தொழில் பாதிப்பு

கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஏற்றுமதியை நம்பியே ஜவுளித்தொழில் இயங்குகிறது. இந்த நிலையில், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் ஜவுளித்தொழில் முடங்கி போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். இனி அது எடுபடாது. உள்நாட்டு பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல், அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.

நடை பயணம்

தி.மு.க. அரசை விமர்சிக்கும் உரிமை மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு இல்லை. அண்ணாமலை நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. சிறிது தூரம் நடப்பது, பின்னர் சொகுசு வாகனத்தில் செல்வது, பின்னர் நடப்பது என அண்ணாமலையின் நடைபயணம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story