மரியா பெண்கள் கல்லூரி ஆண்டு விழா


மரியா பெண்கள் கல்லூரி ஆண்டு விழா
x

வள்ளியூர் மரியா பெண்கள் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். பேராசிரியை ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். கல்லூரி இணையதளத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்காக கல்லூரி நிறுவன தலைவர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.

கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியை லலிதா எழுதிய 'கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்' என்ற நூலை தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட, அதனை கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்று கொண்டார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் கஸ்தூரிரெங்கபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமை கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். 5 நாட்கள் நடந்த முகாமில் கஸ்தூரிரெங்கபுரம் கிராம மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துதல், பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியாக ஆடை வடிவமைப்பு வகுப்புகள், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியாக வெல்டிங் பயிற்சி வகுப்புகள், வீட்டு மின்சாதன பழுது நீக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாமில் மாணவ-மாணவிகள் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியிலும் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியும், நேரு மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளையும் மாணவ-மாணவிகள் நட்டினர்.

நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா ஜெனி, கவுன்சிலர் கனிஸ்டன், டாக்டர் அம்பேத்கர் ஜெய்பீம் அசோசியேஷன் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முகமது இர்பான் மற்றும் மெக்கானிக்கல் துறை விரிவுரையாளர் வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story