உளுந்தூர்பேட்டை அருகே மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவிலில் பழமைவாய்ந்த லோகாம்பிகை உடனுறை மாஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ தேரோட்ட விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் மாஷபுரீஸ்வரர், லோகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் லோகாம்பிகை உடனுறை மாஷபுரீஸ்வரர் எழுந்தருளினர்.
தேரோட்டம்
தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது ஊரில் உள்ள 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழுவதை தடுக்க உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.