மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா


மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 21 Feb 2023 12:30 AM IST (Updated: 21 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவின் போது கோவில் செயல்அலுவலர் சூரியன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து சந்தன கருப்புசுவாமி கோவிலுக்கு வருவார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து கோவிலில் மஞ்சள் காப்புகட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். விழாவையொட்டி தினமும் கோவிலில் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வருகிற மார்ச் 7-ந்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் பூசாரிகளும் செய்து வருகின்றனர். மேலும் பொதுசுகாதாரம், குடிநீர் வசதி ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, செயல் அலுவலர் சரவணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story