திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு-தேரோட்டம் இன்று நடக்கிறது


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவில் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களும் திருவிழாவையொட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவில் 8-ம் நாளான நேற்று பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

இதையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல் குழந்தை வரம் வேண்டி கரும்பில் தொட்டில் கட்டி பக்தர்கள் சுமந்து வந்தனர். பூக்குழி இறங்கியும் பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநங்கைகள் சிலர் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் வழிபாடு நடத்தினர்.

பால் அபிஷேகம்

திருவிழாவையொட்டி நேற்று நேரம் செல்ல... செல்ல... சாரை, சாரையாக பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகை தந்தனர். ஊர்வலத்தின் முன்பு மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க வந்ததால் விழாக்கோலம் பூண்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவப்பூர் செல்லும் சாலையில் பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. பக்தர்கள் கொண்டு வரும் பால் அனைத்தும் கருவறையில் அம்மனுக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. சிறப்பு பூஜையில் அம்மனை பக்தர்கள் பய, பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர், குளிர்பானங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன.

இன்று தேரோட்டம்

விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. காட்டு மாரியம்மன் கோவில் முன்பு தேர் புறப்பட்டு வீதியை சுற்றி வந்து நிலையை அடையும். தேர்த்திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவில் முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story