திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

திருவிழா தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடி மரத்தில் நேற்று இரவு 8 மணியளவில் கொடியேற்றப்பட்டது. மேலும் காப்பு கட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டன. மேலும் கொடியேற்றத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களும் நேற்று இரவு முதல் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காட்டுமாரியம்மன் கோவில் அருகே தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவிழாவையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெறும். இந்த திருவிழா வருகிற 21-ந் தேதியுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.


Next Story