ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா


தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நேற்று நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நேற்று நடைபெற்றது.

கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் ஆற்றாங்கரை கிராமத்தில் கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவில் மிக பிரமாண்டமான அளவில் பொற்கோவில் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் மாவட்ட மக்களால் வள்ளல் என்று அழைக்கக்கூடிய டாக்டர் ராமு களஞ்சியத்தேவர் மாசி களரி திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்தி வந்தார்.

அப்போது 101 கிடாய்கள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை, மருத்துவ உதவி, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அனைத்து சமுதாய மக்களுக்கும் தொடர்ந்து செய்து வந்தார்.

தற்போது அவரது மூத்த மகனும், பொறியாளருமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் ஆகியோர் தங்களது தந்தை வழியில் நற்காரியங்கள் அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மாசி களரி விழா

ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி திருவிழாவின் போது ஆற்றாங்கரையில் உள்ள கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். இதேபோல ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.

இந்த நிலையில் மாசி களரி திருவிழாவின் முதல் நாளன்று காலை 10 மணி முதல் கருப்பணசாமி, ராக்கச்சி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் டாக்டர் ராமு களஞ்சியத்தேவர் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று 101 கிடாய்கள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மூத்த மகனும் பொறியாளருமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மகன் டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், மகள் ராகவி குமரக்கண்ணன், மற்றும் மருமகள்கள், பேரன்-பேத்திகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் 5 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story