திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் மாசி மகம் திருவிழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் மாசி மகத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி,
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் மாசி மகத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாகம்பிரியாள் கோவில்
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும், சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்திருந்தனர்.
சிறப்பு அபிஷேகம்
மாசி மகத்தையொட்டி கோவிலில் சுவாமி-அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு புதிய பட்டாடை அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் கோவில் மண்டபத்தில் தங்கி இருந்தனர். நேற்று காலை அவர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் தங்குவதற்கும் குடிநீர் வசதி, பொது சுகாதார வசதிகளை செய்து இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான சரக செயல் அலுவலர் செந்தில்குமார், கோவில் கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் மற்றும் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






