இரட்டை அருவியாக மாறிய மாசிலா அருவி
கொல்லிமலை மாசிலா அருவியில் ஆண், பெண் தனித்தனியாக குளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சேந்தமங்கலம்
மாசிலா அருவி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்தநிலையில் அந்த மலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் பேர் சென்று வருவது மாசிலா அருவியாகும். ஏனென்றால் அங்குள்ள புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வதென்றால் சுமார் ஆயிரத்து 300 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதனால் சமதள பரப்பில் பாய்ந்து செல்லும் மாசிலா அருவிக்கு சென்று வருகின்றனர்.
தற்போது அங்கு வனத்துறை மூலமாக சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையொட்டி புதியதாக சுற்றுலா பயணிகளின் பொருட்கள் வைக்கும் அறை, உடை மாற்றும் அறை, சாப்பிட தனியாக அறை, குழந்தைகள் விளையாடும் பூங்காவில் கூடுதலாக இருக்கைகள் என்று புதுப்பித்துள்ளனர்.
இரட்டை அருவியாக..
மேலும் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும்போது பெண்களுக்கு சில சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பாறையின் மேல் விழும் தண்ணீரை இரண்டாகப் பிரித்து நீர்வீழ்ச்சியின் கீழே கைப்பிடிகள் அமைக்கப்பட்டு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளித்து மகிழலாம். ஒரு அருவியாக அங்கு காணப்பட்டதை தற்போது இரட்டை அருவியாக மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழும் சுற்றுலா பயணியர் மாசிலா அருவிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அந்த அருவி திறப்பது எப்போது என்று எதிர்பார்த்து வருகின்றனர்.