பரமத்திவேலூர் அருகேமாசிபெரியண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரியண்ணசாமி மற்றும் கன்னிமார் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை விநாயகர் வழிபாடு, புண்யாகம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகமும், மாலை முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது. பின்னர் வாஸ்து பூமி பூஜை, கும்ப அலங்காரம், முதல் காலையாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை, சபர்சாகுதி, தீபாராதனையும், அரசமர விநாயகர், மாசிபெரியண்ண சாமி மற்றும் கன்னிமார்கள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், கோபூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாசி பெரியண்ணசாமி கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.