ஆட்டோ டிரைவர்களுக்கு முககவசம்; துணை போலீஸ் கமிஷனர் வழங்கினார்
நெல்லையில் ஆட்டோ டிரைவர்களுக்கு முககவசங்களை, துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று மாலை கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயணிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக பாளையங்கோட்டையில் இருந்து சைக்கிள் ஓட்டியபடியே சாலையில் வந்த துணை கமிஷனர் சீனிவாசன் புதிய பஸ்நிலைய நுழைவு வாயிலில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு முககவசங்கள் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு முககவசங்கள் வழங்கி கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ, வேன் டிைரவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை வாகனங்களில் ஏற்றி செல்லக்கூடாது. டிரைவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.