பொது இடங்களில் முககவசம் கட்டாயம்


பொது இடங்களில் முககவசம் கட்டாயம்
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 முதல் 20 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தீவிர நடவடிக்கை

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

கோவையில் தற்போது கொரோனாவுக்கு 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி பாதிப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முககவசம் கட்டாயம்

இந்த நிலையில் மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள், கடைவீதிகள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story