மது குடித்த தகராறில் கொத்தனாரை கத்திக்குத்து: 2 வாலிபர்கள் கைது
கரூர் பஸ் நிலையம் அருகே மது குடித்த தகராறில் கொத்தனாரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கத்திக்குத்து
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் கரூர் பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி மாவட்டம் வீரப்பூரை சேர்ந்த கிருபாகரன் (32), அரவக்குறிச்சியை சேர்ந்த விஜயகுமார் (22) ஆகியோர் சூர்யாவிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது திடீரென 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிருபாகரன், விஜயகுமார் ஆகிய 2 பேரும் கத்தியால் சூர்யாவின் கழுத்தில் குத்தினர். இதில் சூர்யா படுகாயம் அடைந்தார். பின்னர் கிருபாகரனும், விஜயகுமாரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சூர்யா கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய கிருபாகரன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.