கொத்தனார் அடித்துக்கொலை; 6 பேர் கைது


கொத்தனார் அடித்துக்கொலை; 6 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே நண்பனை தாக்கியதால் பழிக்குப்பழியாக கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே நண்பனை தாக்கியதால் பழிக்குப்பழியாக கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொத்தனார்

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு, இத்திச்சவேல்கரையை சேர்ந்தவர் தங்கமுத்து. இவருடைய மகன் ரெஜின் (வயது32), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் அதே பகுதிைய ேசர்ந்த தனது நண்பர் ராஜேஷ் (24) என்பவருடன் குழிக்கோடு சிட்கட்விளை பகுதியில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தநிலையில் 6 பேர் வந்தனர். அவர்கள் கம்பு, கல் போன்றவற்றால் ரெஜினையும் அவருடைய நண்பனையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில் ரெஜினுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுத்தார். மேலும் ராஜேசுக்கு கால் முறிந்த நிலையில் மயங்கினார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

பரிதாப சாவு

இந்த தாக்குதல் நடந்த போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த வழியாக யாரும் ெசல்லவில்லை. இதனால் படுகாயம் அடைந்த 2 பேரும் நீண்ட நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள், காயங்களுடன் கிடந்த 2 பேரையும் பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ரெஜின் சிகிச்்சை பலனின்றி இரவில் பரிதாபமாக இறந்தார். ராஜேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நண்பனை தாக்கியதால் பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

அதாவது கடந்த 1-ந் தேதி ரெஜினும், அவருடைய நண்பர்கள் அனிஷ் (23), ராஜேஷ் (24) ஆகியோரும் குழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது, மது தீர்ந்ததால் மீண்டும் வாங்குவதற்கு ராஜேஷ், அனிஷிடம் பணம் கேட்டார். அதற்கு அனிஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், ரெஜின் ஆகிய இருவரும் சேர்ந்து அனிஷை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அனிஷ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு இருந்தபடியே அவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரெஜின், ராஜேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

6 பேர் கைது

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த அனிஷ் தனது நண்பர்களிடம் ரெஜின், ராஜேஷ் சேர்ந்து தன்னை தாக்கியதை எடுத்துக்கூறினார். இதைகேட்டு ஆத்திரமடைந்த அவருடைய நண்பர்கள் வினித் (20), ஜெபின் (28), அருண் (21), கிஜிஸ் (22), பரத் லியோன் (25), மற்றும் 17 வயதுடைய சிறுவன் என 6 பேரும் முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று இருவரையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ரெஜின் ஆஸ்பத்திரியில் இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித், ஜெபின் உள்பட 6 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் கேரளாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது தக்கலை பஸ் நிலையத்தில் வைத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போதையில் ஏற்பட்ட தகராறில் பழிக்குப்பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story