எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை


திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

எலக்ட்ரீசியன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்தவர் ஆரோன் மகன் தேவராஜ் என்ற தேவா (வயது 32), எலக்ட்ரீசியன். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒருவர் பேசினார். அப்போது, அப்பூர்பாளையத்தில் ஒரு வேலை உள்ளது. வந்து செல்லும்படி கூறியுள்ளார்.

உடனே தேவராஜ், தன்னுடைய உதவியாளரான ராஜி (60) என்பவரை அழைத்துக் கொண்டு ேநற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அப்பூர்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கைலாசபாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள்நகர் பகுதியில் சென்ற போது 4 பேர் அவர்களை வழிமறித்தனர்.

ரத்த வெள்ளத்தில் பிணம்

அவர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். இவர்களை கண்டதும் ராஜி அங்கிருந்து தப்பி ஓடினார். மர்மநபர்கள் தேவராஜை சரமாரியாக தாக்க தொடங்கினர். உடனே ராஜி, தேவராஜின் தந்தை ஆரோனுக்கு போன் செய்து, உங்களது மகனை சிலர் தாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

உடனே ஆரோன், தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு தேவராஜை தேடி வந்தார். அப்போது கைலாசபாளையம்- அப்பூர்பாளையம் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தேவராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டதும் ஆரோன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

கழுத்தை அறுத்துக்கொலை

தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். தேவராஜ் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் ஆங்காங்கே கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. தேவராஜ் உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

உடனே போலீசார் தேவராஜ் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவராஜூக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

காரணம் என்ன?

தேவராஜ் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். யார்?, யாரெல்லாம்? தேவராஜூடன் பேசினார்கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் அப்பூர்பாளையம்-கைலாசபாளையம் இடையே எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா?, அதில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எலக்ட்ரீசியன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story