நாடு முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் போராட்டம்


நாடு முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் போராட்டம்
x

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டம்

நாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் லெட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தீர்மானங்கள் குறித்து பேசினார். இதில் மாநில பொருளாளர் குமார், ஓய்வு பிரிவின் பொது செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநிலத் தலைவர் சுதாகரன், முன்னாள் மாநில பொருளாளர் வில்சன் பெர்னபாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், அதனால் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பினை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

டெல்லியில் மாபெரும் போராட்டம்

உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு, முந்தைய அகவிலைப்படி நிலுவைத் தொகை என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் 15-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையில் கல்வி நலன், மாணவர் நலன். ஆசிரியர் நலன் உள்ளிட்டவைகளுக்கு எதிரான திட்டங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன. எனவே தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது. இதற்காக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story