10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.36 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.36 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.36 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 167 அரசு பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 82 மெட்ரிக் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் உள்ள 415 பள்ளிகளை சேர்ந்த 13,407 மாணவர்கள், 12,886 மாணவிகள் என மொத்தம் 26,293 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 10,766 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 11,679 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 22,445 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.36 ஆகும்.

100 சதவீத தேர்ச்சி

கடந்த ஆண்டை விட 4.12 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே போல மாவட்டத்தில் 31 அரசு பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 51 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவியலில் 64 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் 107 மாணவ, மாணவிகளும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


Next Story