நாம் தமிழர் கட்சி பிரமுகரின் வீட்டை மாதர் சங்கத்தினர் முற்றுகை
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி பிரமுகரின் வீட்டை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி பிரமுகரின் வீட்டை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
முகநூல் பதிவு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். இந்த மனு அளிக்கப்பட்டதை விமர்சிக்கும் விதமாக மயிலாடுதுறை கூறைநாடு, கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் செந்தில் மாதர் சங்கத்தை பற்றி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சரிதா தலைமையில் மாவட்ட செயலாளர் வெண்ணிலா, நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கூறைநாடு பகுதியில் திரண்டனர்.
கைது
தொடர்ந்து துடைப்பம், அறுந்த செருப்புகளை எடுத்துக்கொண்டு ஊர்வல்மாக சென்று அவதூறாக பதிவிட்ட செந்திலை கண்டித்து அவரது வீட்டின் முன்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அனைத்து இந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் செந்திலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.