போலி சப்-கலெக்டரின் தாய்-பாட்டியை வீட்டில் பூட்டி சிறைவைப்பு
சப்-கலெக்டர் எனக்கூறி வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் அவரை தேடி வந்தவர்கள் தாய், பாட்டியை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்தனர்.
சேத்துப்பட்டு
சப்-கலெக்டர் எனக்கூறி வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் அவரை தேடி வந்தவர்கள் தாய், பாட்டியை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்தனர்.
கதவை தட்டினர்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த பாஞ்சரை கிராமத்தை அருகில் உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் பரிமளா (வயது 42). இவரது தாயார் எல்லம்மாள் (80), மகள் பரிமளா வீட்டிலேயே வசித்து வருகிறார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு இவரது வீட்டுக்கு திடீரென காரில் 5 பேர் வந்து கதவைத் தட்டினார்கள்.
பரிமளா கதவை திறந்தபோது, அங்கே 5 பேர் நின்றனர். அவர்கள் ''எங்கே உன்னுடைய மகள் சூரியகுமாரி? சப்-கலெக்டர் என அவர் எங்களிடம் கூறினார். வேலை வாங்கி தருவதாக கூறியதால் அவரை நம்பி பணம் கொடுத்தோம். வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கொடுங்கள்''என கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறைவைப்பு
இதையடுத்து பரிமளா மற்றும் எல்லம்மாளை தாக்கிய அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் பூட்டி வெளியே தாழ்ப்பாளை போட்டு சிறை வைத்து விட்டு தப்பினர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து தாழ்ப்பாளை திறந்து விட்டனர். இது குறித்து, தேசூர் போலீசில் பரிமளா புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், சப்-கலெக்டர் என கூறி ஏமாற்றிய போலி சப்-கலெக்டர் சூரிய குமாரி திருச்சியில் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. அவர் ஜாமீனில் வெளிவந்ததால் இங்கு தேடி வந்துள்ளனர். பரிமளா, எல்லம்மாளை வீட்டிற்குள் வைத்து பூட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.