மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள்


மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள்
x
தினத்தந்தி 13 March 2023 12:30 AM IST (Updated: 13 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வீடு தேடி ஊட்டச்சத்து பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பவை பற்றி கர்ப்பிணி பெண்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

தேனி

தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.

சத்துமாவு கலவை

கோதுமை மாவு (45.50 கிராம்), வறுத்த கேழ்வரகு மாவு (6 கிராம்), செறிவூட்டப்பட்ட பாமாயில் எண்ணெய் (5 மி.லி.), முளைக்கட்டிய கேழ்வரகு மாவு (5 கிராம்), கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு (10.50 கிராம்), வெல்லம் (27 கிராம்), தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (1 கிராம்) ஆகிய 7 பொருட்கள் அடங்கிய சத்துமாவு கலவை தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் வறுத்த கடலை மாவு (10 கிராம்), வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (5 கிராம்), வறுத்த வேர்க்கடலை மாவு (4 கிராம்) ஆகிய 3 மூலப்பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, சோயா மாவு வறுத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புது வடிவம்

2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவும் புது வடிவம் பெற்றுள்ளது. இதில் வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோயா மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த சத்துமாவு 'பாக்கெட்' தற்போது கலர்புல்லாக மாறி உள்ளது. என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பது எழுத்தாகவும், படமாகவும் 'பாக்கெட்' கவரில் பளிச்சென்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன? என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்மார்களுக்கு சத்து டானிக், புரோட்டீன் பவுடர், நெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அதன்படி வீடு தேடி இந்த பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பவை பற்றி கர்ப்பிணி பெண்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

வரவேற்பு

கம்பத்தை சேர்ந்த கர்ப்பிணி அனிதா:- தமிழக அரசு கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதிஉதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு சார்பில் சத்துக்கள் நிறைந்த மூலப்பொருட்கள் அடங்கிய கலவை மாவு, வீட்டுக்கே தேடி வந்து கொடுக்கும் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

சின்னமனூரை சேர்ந்த 2 வயது குழந்தையின் தாய் விஜி:- கடைகளில் ஊட்டச்சத்து பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கு அரசு கொடுக்கும் ஊட்டச்சத்து மாவு மிகுந்த பயனளிக்கும். சில மாதங்களில் சத்து மாவு வாங்க மறந்தாலும், அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து விடுகிறார்கள். சில நேரம் நானே நேரில் சென்று வாங்கி விடுவேன். நான் வாங்க மறந்து விட்டால் வீட்டுக்கு தேடி வந்து கொடுத்து விடுகிறார்கள். தற்போது வழங்கப்படும் சத்துமாவு தாய், சேய் நலனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கிறது.

தாய்மார்கள் மகிழ்ச்சி

டொம்புச்சேரியை சேர்ந்த இந்திராணி (அங்கன்வாடி ஊழியர்):- 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் வீட்டுக்கே சென்று முட்டை வழங்கி வருகிறோம். தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள சத்து மாவு பாக்கெட்டுகளை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம். இந்த சத்து மாவை 150 கிராம் அளவுக்கு கஞ்சியாகவோ அல்லது கொளுக்கட்டை போன்றோ சமைத்து அன்றாடம் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை சொல்கிறோம். அங்கன்வாடி மையங்களில் படிக்க வரும் குழந்தைகளுக்கு 50 கிராம் அளவுக்கு கொளுக்கட்டை போன்று செய்து கொடுக்கிறோம். வீடு தேடி சத்து மாவு வழங்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விடுவதற்கு வரும்போது, சத்துமாவை நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைப்பாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் விதமாக ஊட்டச்சத்து உணவுகள் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் மிகவும் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள பச்சிளங்குழந்தைகளின் தாய்மார்களுக்கு அதிக புரதம், இரும்புச்சத்து போன்ற பொருட்கள் அடங்கிய சிறப்பு பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உணவை சாப்பிடும் தாய்மார்கள் மூலம் குழந்தையின் எடை வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கிறோம். ஊட்டச்சத்து குறைப்பாடு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறோம்' என்றார்.

உதவித்தொகை

வீடு தேடி வரும் ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் நிதி உதவி முறையாக கிடைப்பது இல்லை என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. சில இடங்களில் பணம் முழுமையாக கிடைக்காமல் இடைத்தரகர்கள் தொல்லை இருப்பதாகவும் கர்ப்பிணிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 'அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் 'பிக்மி' எண் பெற்று இங்கேயே பிரசவ கால உடல் பரிசோதனைகள் மற்றும் பிரசவம், குழந்தைக்கு தடுப்பூசி ஆகியவற்றை மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் வங்கி கணக்கில் 5 தவணைகளாக ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.


Next Story