ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயம்
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போட்டியின்றி தேர்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர்தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி. இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டார். இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்து நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவிக்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவி ஏற்கவில்லை
இதனை தொடர்ந்து நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் இந்துமதி இதுவரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்கமுடியவில்லை. மேலும் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரண்டு மகன்களுடன் மலை கிராமத்தை விட்டு வெளியேறி ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
பெண் மாயம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை கணவர் பாண்டியன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து இந்துமதி மாயமானது குறித்தும், நாயக்கனேரி பகுதியை சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.