மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்பு
கணவரால் கடத்தப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்கப்பட்டார்.
கணவரால் கடத்தப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்கப்பட்டார்.
நகராட்சி பெண் ஊழியர்
புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மை பணியாளராக இருந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். இதனைடுத்து இவரது இளைய மகள் உமாமகேஸ்வரி(வயது 22) என்பவருக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் 2020-ம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து உமாமகேஸ்வரி மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத்தெருவில் வாடகை வீட்டில் தனது தாய் தனலெட்சுமியுடன் தங்கி பணியாற்றி வந்தார்.
காதல் திருமணம்
இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த சோமையா மகன் மாரிமுத்து (38) என்பவருக்கும், உமாமகேஸ்வரிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு உமாமகேஸ்வரியின் தாய் தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் உமாமகேஸ்வரி எதிர்ப்பையும் மீறி தனது தாய் தனலட்சுமிக்கு தெரியாமல் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாரிமுத்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் மயிலாடுதுறையில் இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர்.
சந்தேகத்தால் தகராறு
இந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாத மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக வைத்திருந்தார். மனைவி வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் உமாமகேஸ்வரி, தாய் தனலெட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது கணவர் மாரிமுத்து தன் மீது சந்தேகப்படுவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உமாமகேஸ்வரியின் உறவினர்கள் அவரை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து தாய் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
கடத்தல்-தாய் புகார்
இந்த நிலையில் கடந்த மாதம்(ஜூன்) 20-ந் தேதி இரவு 7 மணியளவில் மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத்தெருவில் சாலையில் தனது தாயாருடன் உமாமகேஸ்வரி நடந்து சென்றார். அப்போது காரில் சிலருடன் வந்த மாரிமுத்து, வலுக்கட்டாயமாக உமாமகேஸ்வரியை காரில் ஏற்றி கடத்தி சென்றார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தனலெட்சுமி புகார் அளித்தார். ஆனால் ஒரு மாதமாகியும் உமாமகேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், கடந்த 17-ந் தேதி தனலட்சுமி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
மிரட்டல்
அப்போது தனது மகள் உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவையும் போலீசாரிடம் தனலட்சுமி வழங்கினார். அதில் மாரிமுத்து, 'உமாமகேஸ்வரி உன்னை உயிரோடு விடமாட்டேன்' என்று மிரட்டியிருந்தார்.
இதனையடுத்து கடத்தப்பட்ட உமாமகேஸ்வரியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட உமாமகேஸ்வரியை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் உமாமகேஸ்வரி செல்போன் மூலம் தனது தயார் தனலட்சுமியை தொடர்பு கொண்டு தான் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னையில் மீட்பு
இந்த தகவலை தனலட்சுமி மயிலாடுதுறை போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சென்னையில் இருந்த உமாமகேஸ்வரியை மீட்டு நேற்று இரவு மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் இருந்து மீட்டு வரப்பட்ட உமாமகேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை கணவர் மாரிமுத்து உள்பட 5 பேர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்று ராமநாதபுரம், திருப்பூர் அழைத்துச்சென்று மாந்திரீகம் செய்ததாகவும், இறுதியாக சென்னை அருகே கோவளம் பகுதியில் ஒரு சாமியாரிடம் அழைத்துச்சென்று மாந்திரீகம் செய்ததாகவும் பின்னர் சென்னையில் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:-எழுத்துப்பிழைகள் திருத்தம்.(திருத்தம்)மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்பு