மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
ஒரு தலை ராகம் படம் எடுத்த மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்தார்.
ஒரு தலை ராகம் படம் எடுத்த மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்தார்.
குலதெய்வ கோவிலில் வழிபாடு
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு வந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர், தான் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் தனது குலதெய்வமான சியாமளாதேவி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு வந்து ரெயிலில் சென்னை புறப்பட்டு சென்றார். ெரயில் நிலையத்தில் டி.ராஜேந்தரை பார்த்த பொதுமக்கள் அவரோடு சேர்ந்து நின்று தங்கள் செல்போன்களில் புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'ஒரு தலை ராகம்' படம்
தேசத்தின் மீது கொண்ட பற்றால் வந்தே மாதரம் என்ற பாடலை தமிழிலும், இந்தியிலும் நான் பாடியது அனைவரின் மனதிலும் பதிந்ததற்கு காரணம் என்னை உருவாக்கிய இந்த மயிலாடுதுறை மண்தான். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது எனது மகன் சிலம்பரசன் கூறியதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நான் மறுபிறவி எடுத்துவந்து நிற்கிறேன் என்றால் எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த மயிலாடுதுறை மண்தான். மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ஏறிச்சென்றுதான் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் படித்தேன். எனக்கு பிடித்த தரங்கம்பாடி செல்லும் ரெயிலிலேயே 'ஒரு தலை ராகம்' படத்தை எடுத்தேன்.
மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரெயில்
ஆனால் அந்த தரங்கம்பாடி ரெயில் இன்றைக்கு இல்லை, அந்தத் தடம் தான் இருக்கிறது. ஏழை எளிய மக்கள், மீனவ மக்கள் அனைவரும் பயன்படுத்திய இந்த தரங்கம்பாடி ெரயிலை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று இந்த மயிலாடுதுறை மண்ணில் இருந்து மத்திய ரெயில்வே மந்திரிக்கு கோரிக்கை விடுக்கி்றேன்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.