மயிலாடுதுறை பசுமையான மாவட்டமாக மாற்றப்படும்


மயிலாடுதுறை பசுமையான மாவட்டமாக மாற்றப்படும்
x

மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை பசுமையான மாவட்டமாக மாற்றப்படும் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை பசுமையான மாவட்டமாக மாற்றப்படும் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மரக்கன்று நடும் பணி

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடி கூட்டுறவு நகரில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழகம் இயக்கம் எனும் மாபெரும் மரக்கன்று நடும் பணி தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் முரு கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதாராபர்ட் வரவேற்றார். விழாவில் மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்த கலெக்டர் லலிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

பூங்கா-நடைப்பயிற்சி கூடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்று நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மயிலாடுதுறையில் மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மக்களோடு ஒன்றிணைந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.அதாவது வீட்டுமனை பிரிவு அமைக்கும் போது 10 சதவீதம் ஒதுக்கப்படும் இடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த இடங்களில் பூங்காக்கள், நடைப்பயிற்சிக்கூடம், இயற்கையான சூழல் அமைய மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மனைப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது பகுதிகளாக 230 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்கள் ஊராட்சி, பேருராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யாத இடங்கள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நகராட்சி, பேருராட்சிகளில் பதிவு செய்யாத மனைப்பிரிவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.வனத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒதுக்கப்படும் இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

பசுமையான மாவட்டமாக மாற்றப்படும்

வனத்துறையின் மூலம் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருகின்றன. வேளாண்மைத்துறையின் சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருகிறது.மேலும் 30 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் பசுமையான மாவட்டமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் அன்பரசு மற்றும் பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story